search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்பதி பிரமோற்சவம்"

    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவின் 4-வது நாள் கல்ப விருட்ச வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. விழாவின் 4-வது நாளான நேற்று காலை 9 மணியில் இருந்து 11 மணிவரை கல்ப விருட்ச வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    வீதிஉலாவுக்கு முன்னால் பெரிய ஜீயர் சுவாமிகள், சின்னஜீயர் சுவாமிகள், வேத பண்டிதர்கள், அர்ச்சகர்கள், தர்மகிரி வேத பாடசாலை மாணவர்கள் ஆகியோர் நாலாயிரம் திவ்ய பிரபந்த பாடல்களை பாடிய படி ஊர்வலமாக சென்றனர். பஜனை குழுவினர் பக்தி பாடல்களை பாடி சென்றனர். பெண்களின் கோலாட்டம், நாட்டுப்புற கலைஞர்களின் நடனம் ஆகியவை நடந்தன. ஆண், பெண் பக்தர்கள் தெய்வங்களை போல் வேடமிட்டு நடனம் ஆடி வந்தனர்.

    வீதிஉலாவில் திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சுதா நாராயணமூர்த்தி, ராகவேந்திரராவ், கோவில் துணை அதிகாரி ஹரேந்திரநாத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    அதைத்தொடர்ந்து மதியம் 1 மணியில் இருந்து மாலை 3 மணிவரை உற்சவ மூர்த்திகளுக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது. மாலை 3 மணியில் இருந்து மாலை 4 மணிவரை ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலைகள் மற்றும் பச்சைக்கிளிகள் உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் கொண்டு வரப்பட்ட கூடையை பெரிய ஜீயர் சுவாமிகள் தலைமையில் யானைகள் மீது வைத்து நான்கு மாடவீதிகளில் ஊர்வலமாக கோவிலுக்குள் எடுத்துச் செல்லப்பட்டது.

    மேலும் மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணிவரை ஊஞ்சல் சேவை நடந்தது. பின்னர் இரவு 8 மணியில் இருந்து 10 மணிவரை சர்வ பூபால வாகனத்தில் உற்சவர்கள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.



    ×